Tuesday, January 26, 2010

Monday, January 4, 2010

நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

என்னுடைய கலைப் பயணத்தில் கடந்த 18 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த என் அசல் ரசிகர்களுக்கு வணக்கம் கலந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

உங்கள் ஆதரவும், ஊக்கமும் சோதனையான காலகட்டத்திலும் எனக்கு ஊட்டமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

அசல் படத்தின் படப்பிடிப்பு உள்பட என் பணிகள் நிறைவு பெற்று என்னுடைய 50வது படத்தின் தொடக்க பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நான் கடந்த சில மாதங்களாக எனது அகில இந்திய அஜீத்குமார் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் என்னுடைய செயலாளரும், இயக்கத்தின் தலைமை நிர்வாகியுமான சுரேஷ் சந்திரா வாயிலாக பணிகளை மேற்கொண்டிருக்கிறேன்.

ஆனால் எனது கட்டளைக்கு ஏற்ப நடைபெறறுக் கொண்டிருக்கும் நமது இயக்கத்தின் சீரமைப்பு பணிகளை குலைக்க, சுய விளம்பரத்திற்காக ஒரு சிலர் தலைமை நிர்வாகத்திற்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவதாகவும், ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவிப்பதாகவும், நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் எனக்கு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே நம்மைப் பற்றிய அருவருப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். பொதுமக்களுக்கு இன்னல் விளைவிப்பதையோ, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் செய்வதையோ நான் என்றுமே அனுமதித்ததில்லை. அனுமதிக்கவும் மாட்டேன்.

நமது இயக்கத்தின் பணி சமூக சேவைகளில் ஈடுபடுவது மட்டுமே. இத்தகைய பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே நமது இயக்கத்தில் பொறுப்பாளர்களாக இருக்க தகுதி உள்ளவர்கள். 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாவட்ட பதவிகள் பரிசீலிக்கப்படும் என்பதையும், நிரந்தர பதவி என்பது செயல்பாடுகளை ஒட்டி நடக்கும் ஒரு நிகழ்வே. சுழற்சி முறையில் தகுதியுள்ள புதிய நிர்வாகிகள் மாவட்ட அளவில் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.

நமது இயக்கத்தில் சீரமைப்பு பணிகள் முழுவதுமே எனது கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்பதையும் நமது இயக்கத்தின் மாநில நிர்வாகி சுரேஷ் சந்திரா, என்னுடைய எண்ண ஓட்டத்தைத்தான் செயல்படுத்துகிறார் என்பதையும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறேன்.

இவ்வாறு அஜித்குமார் கூறியுள்ளார்.